சென்னையில் நெரிசல் மிகுண்ட பகுதியில் சாதாரண ஒரு செருப்பு கடை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருபவர் கிட்டி. அவரது மகள் ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ். வீட்டோடு மருமகனாக கூடவே இருந்து கடையை கவனித்துக் கொள்ளும் ஐஸ்வர்யாவின் கணவர் ஜித்தன் ரமேஷ். கடை வருமானம் குடும்பத்தை நடத்த, பிள்ளைகளின் படிப்பு செலவை கவனிக்க போதுமானதாக இல்லை என்பதால் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தந்தையின் எதிர்ப்பு இருந்தாலும் கணவரின் ஆதரவுடன் கால் சென்டர் வேலைக்கு செல்கிறார் ஐஸ்வர்யா. இன்று மொபைல்களில் வந்து விட்ட ஒரு வித்தியாசமான ஆப் ஒன்றிற்காண கால் சென்டர் பணியில் சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அங்கே எதிர்முனையில் பேசும் முகம் தெரியாத நபர்களுடன் சல்லாபமாக பேசக்கூடிய ஒரு நிர்பந்தம் உருவாகிறது.

ஆரம்பத்தில் தயங்கினாலும் அதில் கிடைக்கும் வருமானம் தனது குடும்பத்திற்கு ஆதாரமாக இருக்கும் என்பதால் அந்த வேலையை தொடர்கிறார் ஐஸ்வர்யா. அப்படி பேசும் நபர்களில் ஒரு மனிதர் மட்டும் வித்தியாசமாக அதேசமயம் பெண்களை மதித்து கண்ணியமாக பேசுவது ஐஸ்வர்யாவை கவர்கிறது. போகப்போக அந்த நபருடன் நெருக்கமான நட்பு பாராட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு கட்டத்தில் அவரை நேரில் பார்க்க விரும்புகிறார்.

அப்படி சந்திக்க செல்லும் வேளையில் இதேபோல தன்னுடன் பணிபுரியும் ஒரு தோழி இப்படி முகம் தெரியாமல் பழகிய ஒரு நண்பரை சந்திக்க சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட தகவல் ஐஸ்வர்யாவுக்கு தெரியவர அதிர்ச்சியாகி, தன்னுடைய முகம் தெரியா நபரை சந்திக்காமலேயே திரும்புகிறார்.

ஆனால் அவர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைக்கும் அந்த எதிர் நபர் ஐஸ்வர்யாவை பற்றி அவரது குடும்பத்தில் சொல்லி விடுவதாக பிளாக்மெயில் செய்கிறார். இதற்கு பிறகு ஐஸ்வர்யா என்ன விதமான எதிர் விளைவுகளை சந்தித்தார் ? அதிலிருந்து அவரால் மீள முடிந்ததா ? அவர் இப்படி இன்னொரு ஆணுடன் நெருக்கமாக பேசி பழகிய உண்மை அவரது குடும்பத்திற்கு பெரிய வந்ததா ? அவரது கணவர் ஜித்தன் ரமேஷின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பதை மீதி படம் சொல்கிறது.

ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு இந்த அளவுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதா என்கிற அதிர்ச்சியையும் அதேசமயம் அந்த பெண்ணின் கணவரே அவருக்கு இவ்வளவு ஆதரவாக இருக்கிறாரா என்கிற ஆச்சர்யத்தையும் ஒரு சேர இந்த படம் ஏற்படுத்துகிறது.
ஃபர்ஹானா என்கிற அந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு நேர்த்தியாக அந்த கதாபாத்திரத்துடன் தன்னை பொருத்திக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு இஸ்லாமிய பெண்ணாகவே படம் முழுவதும் நம் மனதில் அழுத்தமாக பதிந்து விடுகிறார். குடும்ப வாழ்க்கையில் சகஜமாக பேசுவதற்கு ஆள் இன்றி மன இருக்கத்துடன் இருக்கும் பெண்கள் வெளியில் அந்த நட்பு கிடைக்கும்போது எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தடம் மாறுகிறார்கள் என்பதை காட்சிக்கு காட்சி அழகாக தனது நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவரது கணவனாக வரும் ஜித்தன் ரமேஷ் அந்த அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாத நடிப்பை வழங்கியுள்ளார். இப்படி ஒரு கணவன் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என படம் பார்க்கும் பல பெண்களும் நினைக்கும் அளவிற்கு மனைவிக்கு ஆதரவாக மிகவும் பொறுமையுடன் செயல்படும் ஜித்தன் ரமேஷ் பாத்திரம் எல்லோருக்கும் எளிதில் பிடித்த விடும். இதுபோன்ற நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை ஜித்தன் ரமேஷ் தேர்ந்தெடுத்து நடித்தால் இன்னொரு ரவுண்டு வரலாம்.

ஐஸ்வர்யாவின் தந்தையாக நடித்துள்ள கிட்டி ஒரு பாரம்பரியமான ஆச்சாரங்களை தவறாமல் கடைபிடிக்கும் ஒரு முசல்மானாகவே மாறியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷுடன் பணிபுரியும் சக தோழிகளாக துணிச்சல் மிகுந்த கதாபாத்திரத்தில் நடிகை அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் அந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு. குறிப்பாக அனுமோல் போன்ற தோழிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உணர்த்துகிறது.
படத்தில் முகம் காட்டாமல் அதிக நேரமும், முகம் காட்டி கொஞ்ச நேரமும் வந்தாலும் செல்வராகவன் தனது கதாபாத்திரத்திற்கு, தான் பொருத்தமான தேர்வு என்பதை நிரூபிக்கிறார். ஆரம்பத்தில் ஏதோ சாதாரண குடும்பப் படம் போல துவங்கினாலும் போகப்போக விறுவிறுப்பான ஒரு திரில்லர் படமாக மாறி, அடுத்து என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பை நமக்குள் ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.
அவருக்கு துணையாக ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் அந்த விறுவிறுப்பையும் ஒரு பதட்டத்தையும் நமக்குள் உருவாக்கி விடுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் ஆப்களில் நமக்கே சரியாக இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என்பதையும் அதில் நடக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்களையும் மையமாக வைத்து ஒரு விறுவிறுப்பான படமாக இந்த ஃபர்ஹானாவை உருவாக்கி உள்ளார் நெல்சன் வெங்கடேசன்.
அனைவரும் தாராளமாக இந்த படத்தை பார்க்கலாம். இந்த படத்திற்கு மதச்சாயம் பூச வேண்டிய அவசியமே இல்லை.