ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் இன்னொரு பக்கம் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏ ஆக வெற்றி பெற்ற அவர் சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
இதற்கு முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார் உதயநிதி. அந்த படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. உதயநிதி அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்த பின் மாமன்னன் படத்தை தனது கடைசி படமாக அறிவித்தார்.
இந்த படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் உதயநிதி. ஆனால் அந்த சமயத்தில் துருவ் விக்ரம் மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களின் முன்கட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார் மாரி செல்வராஜ்.
அதனால் விக்ரம், தனுஷ் இருவரிடமும் தான் கடைசியாக இந்த படத்துடன் நடிப்பிலிருந்து ஒதுங்க போவதாக உதயநிதி கூறியதும் விக்ரம், தனுஷ் இருவருமே முதலில் மாமன்னன் படத்தை இயக்கி விட்டு அதன்பிறகு தங்களது படத்தை இயக்குங்கள் என மாரி செல்வராஜிடம் கூறி பெருந்தன்மையாக வழி விட்டு ஒதுங்கினார்களாம். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜே கூறியுள்ளார்