இயக்குனர் தங்கர் பச்சான் உணர்வுப்பூர்வமான படங்களை கொடுப்பதில் பெயர் பெற்றவர். அழகி, சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல கருத்தாழம் கொண்ட படங்களை இயக்கிய தங்கர் பச்சான் தற்போது கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் பாரதிராஜா, கவுதம் மேனன், எஸ் ஏ சந்திரசேகரன் போன்ற சீனியர் இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கிட்டத்தட்ட கதையின் நாயகன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். பாடல்களை வைரமுத்து எழுத ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, ‘இந்த படத்தில் தங்கர் பச்சான் ஒரு பாடலுக்கான சிச்சுவேஷன் குறித்து கூறும்போது இந்த பாடல் படத்தில் யாருக்காக என்று கேட்டேன். நடிகர் யோகிபாபுவுக்காக என்று அவர் கூறினார்.
உடனே திடீரென ஒரு யோசனை வந்ததும், இந்த படத்தில் யோகிபாபுவின் தலைமுடி கெட்டப்பை மாற்றி நடிக்க வைக்கிறீர்களா, இல்லை அப்படியே விட்டு விட்டீர்களா என்று கேட்டேன். அப்படியே விட்டுவிட்டோம் ஒரிஜினல் தலைமுடியுடன் தான் நடிக்கிறார் என்று கூறியதுமே, அவரது அந்த தலைமுடி பற்றியும் என் பாடல் வரிகளுக்குள் வரும் விதமாக பாடல் எழுதியுள்ளேன்.
இதற்கு முன்னதாக ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கென பாடல்களை எழுதியுள்ளேன் ஆனால் அப்போதெல்லாம் அவர்கள் முகத்தை பார்த்து பாடல் எழுதியவன், முதன்முறையாக யோகிபாபுவிற்காக அவரது முடியை பார்த்து பாடல் எழுதி உள்ளேன்” என்று கூறினார்.