கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் சமீப காலமாக பலர், ஒவ்வொரு சமுதாயத்தின் வழிபாட்டு முறைகளையும் ஒவ்வொரு மதத்தின் கடவுள்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசி வருகின்றனர். இது மற்றவர்களின் மனதை புண்படுத்தும் என்பது பற்றியோ, இதற்காக தங்கள் மீது சட்டம் பாயும் என்பது பற்றியோ அவர்கள் அறிந்து தான் பேசுகிறார்களா என்பது தெரியவில்லை.
அப்படி சமீபத்தில் பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் நடத்திய ஒரு கலை நிகழ்ச்சியில் பேசிய அவரது உதவி இயக்குனரான விடுதலை சிகப்பி என்பவர் பேசும்போது, மலக்குழி அல்லும் அவல நிலை பற்றி ஒரு கவிதை பேசுவதாக கூறி அதில் புராண கடவுள்களான ராமன், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகியோர் குறித்து ரொம்பவே கிண்டல் அடிக்கும் விதமாக பேசினார்.
அவரது அவமரியாதை பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அரங்கில் கைதட்டல்களும் எழுந்தன. ஆனால் இதுகுறித்து மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. இந்தநிலையில் அவர்மீது நான்கு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த கைது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என இயக்குனர் பா ரஞ்சித் வரிந்து கட்டிக்கொண்டு அந்த உதவி இயக்குனர் செய்த தவறுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பா ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலக்குழி மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக்காட்டுவதற்காக, கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அத்தகைய வேலையைச் செய்து மரணத்தைத் தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பின் கவிதை இருந்தது என்று கூறினார்.
ஆனால் அவருக்கு எதிராக இணையத்தில் சில குழுக்கள் தொடர்ந்து செய்து வந்த பொய் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். அவரது இந்த அறிக்கைக்கும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது