இயக்குனர் மாரி செல்வராஜ் டைரக்ஷனில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் கடந்த வருடமே படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகும் விதமாக போஸ்ட் புரொடக்சன் பணிகள் முறுக்கி விடப்பட்டுள்ளது.
தனது முந்தைய இரண்டு படங்களிலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றிய மாரி செல்வராஜ், முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து மாமன்னன் படத்தில் பணி புரிந்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஏற்கனவே வடிவேலுவின் கதாபாத்திரம் மிகப்பெரிய பலம் என்று மாரி செல்வராஜ், உதயநிதி உள்ளிட்டவர்கள் கூறிவரும் நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் வடிவேலு.
கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளியான பொற்காலம் படத்தில் தேவா இசையில் முதன்முதலாக பாட ஆரம்பித்த வடிவேலு அதைத்தொடர்ந்து பல படங்களில் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக ஏ.ஆர் ரகுமான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது அவரது திரையுலக பயணத்தில் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்ட வைரக்கல் என்று சொல்லலாம்.