V4UMEDIA
HomeNewsKollywoodதங்கர் பச்சனுக்காக படப்பிடிப்பிற்கு பெர்மிஷன் போட்டுவிட்டு வந்த லோகேஷ் கனகராஜ்

தங்கர் பச்சனுக்காக படப்பிடிப்பிற்கு பெர்மிஷன் போட்டுவிட்டு வந்த லோகேஷ் கனகராஜ்

அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை என உணர்வுபூர்வமாக படங்களை இயக்கியவர் இயக்குனர் தங்கர் பச்சான். தற்போது கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தை இவர் இயக்கியுள்ளார். பாரதிராஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், கதாநாயகியாக அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, ”தங்கர் பச்சான் இயக்கிய படங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். இந்த விழாவிற்கு அழைப்பதற்காக என்னை தொடர்பு கொண்டபோது நானே அவருடைய அலுவலகத்திற்கு வருகிறேன் என்று சொன்னேன். ஆனால் அது முறையாகாது, நானே நேரில் வருகிறேன் என்று கூறி என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்.

நானும் அவரும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் சினிமா குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் இன்னும் சினிமா பற்றி எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டும் என புரிந்து கொண்டேன்.

தற்போது சாலிகிராமத்தில் உள்ள ஸ்டுடியோவில் லியோ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே பெர்மிஷன் போட்டு விட்டு இங்கே வந்துள்ளேன். உடனடியாக அங்கே செல்ல வேண்டும்” என்று கூறிவிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கிளம்பினார் லோகேஷ் கனகராஜ்.

அவரைப்போலவே இயக்குனர் கௌதம் மேனனும் லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து தான் இந்த விழாவிற்கு கலந்து கொள்ள வந்ததாகவும், தானும் படப்பிடிப்புக்கு கிளம்பிச் செல்ல வேண்டும் என்றும் கூறிவிட்டு கிளம்பி சென்றார்..

Most Popular

Recent Comments