தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். அவரைப்போலவே அவரது மகன் நாகசைதன்யா தற்போது நேரடி தமிழ் படம் மூலம் உள்ளே நுழைய இருக்கிறார். கஸ்டடி என டைட்டில் வைக்கப்பட்டு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தெலுங்கிற்கு சென்று படம் இயக்கியுள்ளதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏழுந்துள்ளது. வரும் மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நாயகன் நாகசைதன்யா இந்த படத்திற்கு முதலில் சிவா என்றுதான் டைட்டில் வைக்கலாம் என வெங்கட் பிரபு சொன்னார். ஆனால் நான் அது தந்தை நடித்த கல்ட் கிளாசிக் படம். அந்த பெயரில் டைட்டில் வைக்க வேண்டாம் என உறுதியாக கூறிவிட்டேன். அதன் பிறகு தான் கஸ்டடி என டைட்டில் வைத்தோம் என்று கூறினார்.
சிவா திரைப்படம் தான் தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது. தமிழில் உதயம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இங்கேயும் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. இந்த படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி இருந்தார்.