விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பிச்சைக்காரன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிச்சைக்காரன் 2 என்கிற பெயரில் தயாராகி உள்ளது.

முதல் பாகத்தை இயக்குனர் சசி இயக்கிய நிலையில் இந்த இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்குனராக மாறி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பு, படத்தொகுப்பையும் அவரே கவனித்துள்ளார்.

இந்த படம் வரும் மே 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய விஜய் ஆண்டனி, ‘ஒரு விபத்தில் சிக்கி மீண்டு வந்ததற்கு பிறகு முதல் முறையாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறேன். ஒரு பாடல் காட்சியை படமாக்கிய போது எதிர்பாராத விதமாக படகு விபத்து ஏற்பட்டு அதில் என் முகத்தில் அடிபட்டு சுயநினைவிழந்து கடலில் விழுந்துவிட்டேன். அப்போது கதாநாயகியும் ஒளிப்பதிவாளரின் உதவியாளரும் தான் என்னை காப்பாற்றினார்கள்.

இறைவன் அருளால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டேன். முன்பை விட இப்போது சுறுசுறுப்பாக உணர முடிகிறது. பிச்சைக்காரன் 2 படம் 2 மணி நேரம் 30 நிமிடம் சரியாக ஓடும் விதமாக சென்சார் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக இப்படி ஒரு படத்திற்கு இதே அளவு சரியான நேரம் கிடைத்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த படத்திற்கு இப்படி ஆச்சரியமான ஒரு ரன்னிங் டைம் கிடைத்துள்ளது என்று கூறினார்.