மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. தெலுங்கு சினிமாவில் இளம் நாயகனான நாக சைதன்யா முதன்முறையாக இந்த படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க முக்கிய வேடங்களில் அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் மே-12ல் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை வழக்கம் போல தனது வித்தியாசமான பாணியல் துவங்கி உள்ளார் வெங்கட் பிரபு.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த ஒரு அறிவிப்பை வெங்கட் பிரபுவும் படத்தின் நாயகன் நாகசைதன்யாவும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள லாக்கப்பிற்குள் இருந்தபடி பேசுவது போன்று வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தனர்.
இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 4 நிமிடம் ஓடக்கூடிய ஒரு புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. அதில் நடிகர் நாகசைதன்யா இந்த படத்திற்காக தமிழிலும் தானே டப்பிங் பேசுவதாக கூறி டப்பிங் பேச முயற்சிப்பது போலவும் இது என்னடா சோதனை என்று வெங்கட் பிரபு தலையில் கை வைத்துக்கொண்டு இதை எப்படி சமாளிப்பது என அமர்ந்திருப்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக வெங்கட் பிரபுவின் உதவியாளர் வந்து, இந்த படத்திற்கு நாகசைதன்யாவே தமிழில் சூப்பராக டப்பிங் பேசி விட்டார் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறுவது போல இந்த புரோமோ உருவாகியுள்ளது.
பலருக்கும் தெலுங்கு நடிகரான நாகசைதன்யா எப்படி தமிழ் வசனங்களை பேசப்போகிறார் என்று சந்தேகம் இருக்கும். அதை தீர்ப்பது போல இந்த புரோமோ வீடியோவில் பதில் சொல்லிவிட்டார் வெங்கட் பிரபு.