தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ரசிகர் மன்றத்தில் இருந்து மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு உதவி செய்யும் விதமாக உற்சாக தூண்டுதல் அளித்து வருகிறார் நடிகர் விஜய்.

இதை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்கள் பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகள், கல்வி மருத்துவ உதவிகள் ஆகியவற்றை தங்களால் இயன்ற அளவு தொடர்ந்து செய்து வருகிறனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது சென்னைக்கு நேரில் அழைத்து விருந்து அளித்து ஆலோசனைகள் கூறி பாராட்டி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் விஜய்.

இந்த நிலையில் சமீபத்தில் திருச்சி, சேலம் நாமக்கல் தஞ்சாவூர் வட சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது அவர்கள் ஆற்றி வரும் மக்கள் பணிகள் குறித்து விஜய் மனம் மகிழ்ந்து பாராட்டி உள்ளார். குறிப்பாக இந்த பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏழைகளுக்கு தினமும் விலையில்லா விருந்து அதாவது அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

சில பகுதிகளில் காலை மதியம் என இரண்டு வேளையும் உணவு வழங்கி வருகின்றனர். தனது ரசிகர்கள் இப்படி தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவதை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாகவே அவர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் விஜய்.