துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே 1 தினத்தை முன்னிட்டு இந்த படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக தான் அறிவிக்கப்பட்டது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இந்த படத்தில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அல்லது விலக்கப்பட்டதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்து விலகிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைதொடர்ந்து இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என்று யூகமாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி தான் இந்த படத்தை இயக்குகிறார் என்பது தற்போது வெளியிடப்பட்ட டைட்டில் லுக் போஸ்டரில் உறுதியாகி உள்ளது.
வேதாளம் படத்திற்கு பிறகு அனிருத் மீண்டும் இந்த படத்தில் அஜித்துக்கு இசையமைப்பதற்காக இணைந்துள்ளார். ஏற்கனவே துணிவு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
பொதுவாகவே அஜித்திற்கு வி என்கிற எழுத்தில் ஆரம்பிக்கும் டைட்டிலை வைப்பது சென்டிமென்ட் ஆகவே இருக்கிறது. அந்த வகையில் வில்லன், வீரம், விஸ்வாசம், விவேகம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கும் அதே சென்டிமென்டில் விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.