V4UMEDIA
HomeReviewபொன்னியின் செல்வன்-2 ; விமர்சனம்

பொன்னியின் செல்வன்-2 ; விமர்சனம்

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கினார். அதன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் அறிமுகம் மற்றும் சில சஸ்பென்ஸ்களுடன் முடித்து இருந்தார். இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு என்ன விதமான ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் அளித்துள்ளது. பார்க்கலாம்..

கடலில் நடந்த போரில் கப்பலோடு மூழ்கி அருண்மொழிவர்மன், வந்தியத்தேவன் இருவரும் இறந்து விட்டதாகவே தகவல் பரவுகிறது இதைத் தொடர்ந்து மதுராந்தக சோழருக்கு முடி சூட்டுவதற்காக பெரிய பழுவேட்டரையர், நந்தினி உள்ளிட்ட குழுவினர் கூட்டு முயற்சி செய்கிறார்கள். இந்தநிலையில் அருண்மொழிவர்மனை நாகப்பட்டினத்தில் வைத்தியத்திற்காக சேர்த்து பாதுகாக்கும் வந்தியத்தேவன், பாண்டியனின் ஆபத்து உதவிகளிடம் எதிர்பாராத விதமாக சிக்குகிறார்.

அப்போது சுந்தர சோழனையும் அவரது மகன்கள் இருவரையும் கொல்வதற்கு நந்தினியும் பாண்டிய ஆபத்துதவிகளும் திட்டம் தீட்டி இருப்பதை அறிந்து கொண்டு அங்கு இருந்து தப்புகிறார். இதில் ஆதித்ய கரிகாலனை எச்சரித்தும் அவர் அதை மீறி நந்தினியை சந்திக்க கிளம்புகிறார். அருண்மொழிவர்மனை காப்பாற்றி அரண்மனைக்கு அனுப்பி வைக்கும் வந்தியத்தேவன் ஆதித்ய கரிகாலனை காப்பாற்ற செல்லும் முயற்சியில் கொலை பழிக்கு ஆளாகிறார்.

சுந்தர சோழரை கொல்லவும் பாண்டியனின் ஆபத்துதவி கும்பல் முயற்சிக்கிறது. இதில் மர்மமாகவே வலம் வந்த ஊமை ராணி தன் உயிரை விடுகிறார். இந்த குழப்பத்திற்கெல்லாம் எப்படி தீர்வு கிடைக்கிறது.. கடைசியில் யார் முடி சூட்டினார்கள் என்பதற்கு கிளைமாக்ஸ் தீர்வு சொல்கிறது.

முதல் பாகத்தில் அனைவரின் அறிமுகக் காட்சியையும் முழுப் படமாக விவரித்த இயக்குநர் மணிரத்னம். இரண்டாம் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்படி திரைக்கதை அமைத்து ரசிகர்களை சோழ தேசத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார். காட்சிக்கு காட்சி கூஸ்பம்ப் கொடுக்கும்படியான மொமண்ட்ஸ்கள் நிறைய இருந்தாலும் அப்படியான கமர்சியல் விஷயங்களை எதையும் செய்யாமல் ஜஸ்ட் லைக் தட் கதையோடு டிராவல் செய்து, நாம் ஏதோ அந்த சோழ தேசத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டு அங்கு நடக்கும் சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் செய்துள்ளார் இயக்குநர் மணிரத்தினம்.

ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவரவர்களுக்கான ஸ்பேஸை சரியான இடங்களில் கொடுத்து அவர்களிடம் சிறப்பான நடிப்பை வாங்கி காட்சிகளுக்கு மட்டும் அல்லாமல் திரைக்கதைக்கும் உயிரூட்டி மனதுக்கு நெருக்கமான ஒரு காவியத்தை கொடுத்துள்ளார்.

ஆதித்த கரிகாலனின் வீரத்தையும் விரக்தியையும் கண்களிலேயே அசாத்தியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம். நந்தினியுடன் உணர்ச்சிகரமான நீண்ட உரையாடலை நிகழ்த்தும் அந்தக் காட்சி, விக்ரம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்று உணர வைக்கிறது.

யாரையும் மயக்கிவிடும் நந்தினியின் அழகையும் மனதின் ஆழத்தில் அவள் தேக்கி வைத்திருக்கும் வன்மத்தையும் அதைத் தாண்டி அவளுக்குள் இருக்கும் காதலையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ரகுமான், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் சிறப்பாக இருக்கிறது.

Most Popular

Recent Comments