தெலுங்கு திரையுலகை சேர்ந்த முன்னாள் சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகரும் மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா விஜயவாடாவில் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
என்.டி.ராமராவின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா மற்றும் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரையுலக பயணத்தில் என்.டி.ராமராவ் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறார் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “எனக்கு நினைவு தெரிந்த வயதில் நான் பார்த்த படம் என்டி ராமராவ் நடித்த பாதாள பைரவி. அந்த படத்தில் இருந்து பைரவி என்கிற பெயர் எனது வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டது. நான் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானபோது நான் பேசிய முதல் வசனமே பைரவி வீடு இதுதானா என்பது தான். அதேபோல நான் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த போதும் மறுத்தேன். ஆனால் அந்த படத்திற்கு பைரவி என்கிற டைட்டிலை கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன். இந்த பைரவி என்கிற தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது என் டி ராமராவ் அவர்கள் தான். அவர் ஒரு யுக புருஷன்.
அவருடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளேன். அதில் ஒரு படத்தில் நடிக்கும்போது சண்டை காட்சிகளில் நான் இதுபோன்று ஓடி வருவேன் நீ என்னுடன் இப்படி இணைந்து கொள் என கூறினார். நான் நினைத்தேன் நான் தான் வேகமாக செயல்படுவேன் என்று. ஆனால் அன்றைக்கு தான் தெரிந்து கொண்டேன் என்னை விட மிகவும் வேகமாக செயல்படுபவர் என்.டி.ராமராவ் என்று.. அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்” என என்.டி ராமராவ் பெருமைகளையும் அவருடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.