தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட சினிமா துவங்கிய காலகட்டத்தில் இருந்து பட தயாரிப்பில் இறங்கி பாரம்பரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது ஏவிஎம் நிறுவனம். தமிழ் சினிமா என்று சொன்னாலே இன்று உடனே ஞாபகத்திற்கு வருவது ஏவிஎம்மின் உற்றும் உலக உருண்டை நினைவு சின்னம் தான்.
அந்த அளவிற்கு இந்த திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி கலைஞர்களும் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெருமையை பெற்றிருப்பார்கள். அதே சமயம் சமீப வருடங்களாக பட தயாரிப்பில் இருந்து ஏவிஎம் நிறுவனம் ஒதுங்கி இருக்கிறது.
இதை திறம்பட நடத்தி வந்த ஏவிஎம் சரவணன் சமீப நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஏவிஎம் சரவணனை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஏவிஎம் நிறுவனத்தின் தரப்பில் இருந்து கூறும்போது, “பாரம்பரியம் மாறாமல் தலைவர் கலைஞர் வழி எங்கள் இல்லம் வந்து பரிவுடன் உடல் நலம் விசாரித்து சென்ற மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.