தெலுங்கு சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ஆகவும் பின்னர் ஆந்திர மாநிலத்தின் முதல்வராகவும் கோலோச்சியவர் என்.டி.ராமராவ். தமிழ் ரசிகர்களுக்கு கர்ணன் படத்தில் நடித்த ஸ்ரீ கிருஷ்ணனாக அவர் ரொம்பவே நெருக்கமானவர். அவரது மகன் பாலகிருஷ்ணா தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜயவாடாவின் இன்று என்.டி.ராமாராவின் 100வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வில் தென்னிந்தியாவிலிருந்து பல அரசியல் பிரபலங்களுக்கும் திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இது குறித்து பேசிய நடிகர் பாலகிருஷ்ணா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயவாடா விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
அவருக்கு நடிகர் பாலகிருஷ்ணா மிகப்பெரிய வரவேற்பு அளித்தார். முரட்டுத்தனமாக தோற்றம் காட்டக்கூடிய பாலகிருஷ்ணா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்ததும் ஒரு ரசிகராக மாறிப்போய் அவரை வரவேற்ற புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவின் வைரலாக பரவி வருகின்றன.