பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து விட்டனர்.
இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஹைதராபாத், மும்பை, டெல்லி, கேரளாவை தொடர்ந்து பெங்களூருவில் சமீபத்தில் இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலுமே படத்தின் முக்கிய நட்சத்திரங்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா ஆகிய ஆறு பேரும் தவறாமல் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெயம் ரவிக்கு பெங்களூரு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர். இதனைக் கண்ட ஜெயம் ரவி ரொம்பவே மனம் நெகிழ்ந்து கண்கலங்கி விட்டார்.
இதற்கு முன்னதாக தனி ஒருவன் படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியும் அங்கீகாரமும் கிடைத்தபோது உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே கண்கலங்கினார் ஜெயம் ரவி. அதன் பிறகு பொன்னியின் செல்வன் படம் மூலம் தனக்கு இன்னும் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் தமிழ்நாடு கடந்தும் கிடைத்திருப்பதை கண்டு தன்னை அடக்க முடியாமல் அவர் சில சிறிது நேரம் மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்டு விட்டார்.
உடனே அருகில் இருந்த சக நடிகர்களான விக்ரம், திரிஷா, கார்த்தி ஆகியோர் ஜெயம் ரவியை தேற்றி ஆறுதல் படுத்தினர். இந்த நிகழ்வு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.