விஜய் ஆண்டனி நடிப்பில் நீண்ட நாட்களுக்கு முன்பே தயாராகி பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு வழியாக தற்போது வெளியாகி உள்ள படம் தான் இந்த தமிழரசன்.
இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் இந்த படம் உருவான சமயத்தில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தாமதமாக வெளியானாலும் அந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஈடு கட்டி உள்ளதா ? பார்க்கலாம்.
விஜய் ஆண்டனி நேர்மையான போலீஸ் அதிகாரி. உயர் அதிகாரி சோனு சூட்டின் அடாவடி உத்தரவுக்கு அடிபணியாமல் இருப்பதால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதே சமயம் அவரது மகன் திடீரென எதிர்பாராத விதமாக இதய பாதிப்பு நோய்க்கு ஆளாகி ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிறார். அங்கே இதய மருத்துவ நிபுணரான சுரேஷ்கோபி கட்டாயம் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என கூறுகிறார்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி செலவாகும் என்றும் ஆரம்பத்தில் 20 லட்சம் பணம் கட்டினால் தான் இதயம் கிடைக்க செய்யும் முன்னுரிமை பட்டியலில் விஜய் ஆண்டனியின் மகன் பெயரை இடம்பெறச் செய்ய முடியும் என்றும் கறாராக கூறுகிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் கட்டச்சொன்ன 20 லட்சத்திற்கே தன்னிடம் இருக்கும் பொருள்களை அனைத்தையும் விற்றும் முழுமையாக கட்ட முடியாமல் திணறுகிறார் விஜய் ஆண்டனி.
இதனால் அவரது மகனுக்காக இதயம் வழங்க ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவருக்கு பின்னால் வந்த ஒரு மத்திய மந்திரியின் பெயர் சேர்க்கப்படுகிறது. தனது மகன் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த பாரபட்சத்தை தாங்கிக்கொள்ள முடியாத விஜய் ஆண்டனி, அதிரடி நடவடிக்கையாக துப்பாக்கி முனையில் டாக்டர் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.
அவரது நோக்கம் புதிதாக ஒரு மாற்று இதயம் வரும்போது தனது மகனுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் உயர் அதிகாரி சோனு சூட் விஜய் ஆண்டனியை சுட்டு பிடிக்க முயற்சி செய்து அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறார்.
இன்னொரு பக்கம் கமிஷனர் ராதாரவி விஜய் ஆண்டனி உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். கடைசியில் விஜய் ஆண்டனியின் மகனுக்கு இதயம் கிடைத்ததா ? இல்லை இதயமே இல்லாத மனிதர்களால் விஜய் ஆண்டனி வேட்டையாடப்பட்டாரா என்பது கிளைமாக்ஸ்.
மகன் உயிரை காப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் பாச போராட்டம் தான் முழு படமும். நியாயமான முறையில் தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் கொடுத்து மகனைக் காப்பாற்ற முயற்சித்தும் முடியாமல் போகவே கடைசியில் அதிரடி நடவடிக்கையில் இறங்கும் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் நிஜத்தில் இது சாத்தியமா என்றால் இல்லை தான்.. ஆனால் நம்மில் ஒருவராகவே அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதால் நமக்கு பிடித்து போய்விடுகிறது.
அதேபோல ஆரம்பத்தில் சாதாரண ஒரு மருத்துவராக அறிமுகமாகும் நடிகை சுரேஷ்கோபியை பார்க்கும்போது அவ்வளவு பெரிய நடிகர் எதற்காக இந்த சிறிய கதாபாத்திரத்தில் இன்று நான் நினைக்க தோன்றும்.. ஆனால் இடைவேளைக்கு பின் கதை நகர ஆரம்பிக்கும்போது இவரது கதாபாத்திரம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது. அவ்வளவு எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக மருத்துவர்களும் மனிதர்கள் தான் என்பதையும் மருத்துவர்கள் வேறு, மருத்துவமனை நிர்வாகம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறும்போது உண்மை தானே என அவர் சொல்வதை ஆமோதிக்க தோன்றுகிறது.
அதிரடி போலீஸ் ஆபீஸராக பாலிவுட் நடிகர் சோனு சூட் செம பிட்டாக இருக்கிறார். ஆரம்பத்தில் நெகட்டிவ் சாயல் காட்டினாலும் இறுதியில் விஜய் ஆண்டனியின் நிலை உணர்ந்து குணம் மாறுவது நிறைவு தருகிறது.
விஜய் ஆண்டனியின் மனைவியாக பாசமான அம்மாவாக ரம்யா நம்பீசன் மிகப்பொருத்தமான தேர்வு என்பதை நிரூபிக்கிறார்.
இந்த சீரியஸான கதையில் யோகி பாபுவுக்கு என்ன வேலை என நினைத்தால் அவரும் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம் கெடா வெட்டுகிறார். கமிஷனராக வரும் ராதாரவி, விஜய் ஆண்டனியின் நண்பராக வரும் முனீஸ்காந்த், மருத்துவமனை நிர்வாகத்தின் சி இ ஓ ஆக நடித்துள்ள சங்கீதா மற்றும் சாயா சிங் உள்ளிட்ட பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
குறிப்பாக சங்கீதா கடைசி வரை மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசினாலும் தங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை ஆணித்தரமாக கூறும்போது இவர் சொல்வதும் ஒரு பக்கம் சரிதானே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. கடைசியில் மகளின் கேள்வியால் அவர் மனம் மாறுவது டச்சிங் ஆன ஒன்று.
மொத்தத்தில் தமிழரசன் படம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்று சொல்லும் விதமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது.