வாத்தி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் கன்னட முன்னணி நட்சத்திரமான சிவராஜ் குமார் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் புதிதாக அமெரிக்க நடிகரான எட்வர்ட் சொன்னேன்பிலிப் என்பவர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். அமெரிக்க நடிகர் என்றாலும் இவர் நடித்ததெல்லாம் பெரும்பாலும் பாலிவுட் படங்களில் தான்.
அந்த வகையில் கங்கணா ரணவத் இயக்கி நடித்த மணிகர்ணிகா படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்ல கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தில் ஆங்கிலேய அதிகாரியாகவும் நடித்திருந்தார்.
பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஆங்கிலேயர் சம்பந்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் இவருக்குத்தான் முதல் அழைப்பு போகும். அந்த வகையில் தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் மூலமாக தமிழிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார் எட்வர்ட்.