சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 169 வது படமாக உருவாகி வருகிறது ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் மட்டும் இல்லாது மலையாள, தெலுங்கு, கன்னடம் மற்றும் பாலிவுட்டிலிருந்தும் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்து வருகின்றனர்,

அப்படி இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் வசந்த் ரவி. ராம் இயக்கிய தரமணி படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் வெளியான ராக்கி என்கிற படத்தில் இன்னும் ரசிகர்களிடம் நெருக்கமாக அறிமுகமானார்.

இருந்தாலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருவதால் மிகப்பெரிய அளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் வசந்த் ரவி.

இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டபோது படம் குறித்து சூப்பரான சில அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார் வசந்த் ரவி.

இதுபற்றி அவர் கூறும்போது, இயக்குனர் நெல்சன் இந்த படத்தில் மிகவும் அற்புதமான வேலையை காட்டியுள்ளார். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். இதுவரை அவரது 168 படங்களில் பார்த்திராத ஒரு புதிய ரஜினியை இந்த படத்தில் நிச்சயம் ரசிகர்கள் பார்ப்பார்கள்.

மொத்தத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் அதிர வைக்கும் ஒரு படமாக ஜெயிலர் உருவாகி வருகிறது என்று கூறியுள்ளார் வசந்த் ரவி. இந்த தகவல்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களை ரொம்பவே உற்சாகப்படுத்தி உள்ளன.