Home News Kollywood அயோத்தி 50வது நாள் விழாவில் படக்குழுவினருக்கு நினைவு பரிசு

அயோத்தி 50வது நாள் விழாவில் படக்குழுவினருக்கு நினைவு பரிசு

கடந்த மார்ச் மூன்றாம் தேதி அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி டைரக்ஷனில் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வெளியான படம் அயோத்தி. இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடிக்க முக்கியமான இடத்தில் பாலிவுட் நடிகர் யஷ்பால் சர்மா மற்றும் காமெடி நடிகர் புகழ், சார்லஸ் வினோத், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  

வட மாநிலமான அயோத்தியில் இருந்து ஒரு தீபாவளி தினத்தன்று ராமேஸ்வரத்திற்கு சாமி கும்பிட வரும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தையும் வந்த இடத்தில் குடும்பத் தலைவியின் உயிரை பறிகொடுத்து விட்டு, கணவன், மகள், மகன் ஆகியோர் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்படுவதையும் இவர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லாத இளைஞன் சசிகுமார் இவர்களுக்கு வேண்டிய உதவியை ஒரே நாளில் செய்து அவர்களை பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைப்பதும் தான் இந்த படத்தின் கதை.

ஆனால் இப்படி மூன்றே வரிகளில் சொன்ன விஷயத்தை படம் முழுக்க ஒரு போராட்டம் நடத்தி மனித மனங்களை வென்று எப்படி சசிகுமார் சாதிக்கிறார் என்பதால் படத்தின் இறுதிக்காட்சியில் சசிகுமார் யார் என தனது பெயரை சொல்லும்போது தியேட்டரில் எழுந்து நின்று கைதட்டடினார்கள்.

அந்த இடத்தில் தான் மனிதம் வென்றுள்ளது. இந்த படம் வெளியாகியதில் இருந்து அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் போட்டி போட்டுக்கொண்டு இந்த படத்தை பாராட்டினார்கள்.

தியேட்டர்களில் டீசன்டான வெற்றியைப் பெற்ற அயோத்தி, அதன் பிறகு ஓடிடியிலும் தற்போது தொடர்ந்து வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று ஐம்பதாவது நாளை இந்த படம் தொட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் அயோத்தி பட  தயாரிப்பு நிறுவனம் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தது.

இந்த நிகழ்வில் சமுத்திரக்கனி, சாந்தனு பாக்யராஜ், அஸ்வின், தயாரிப்பாளர் எஸ்ஆர்.பிரபு, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.