குழந்தை நட்சத்திரம், ஷாலினியின் தங்கை, அஜித்தின் மச்சினி என பேபி ஷாமிலிக்கு நிறைய அடையாளங்கள் உண்டு.. குழந்தையாக இருந்து குமரியாக மாறியபின்னர், தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். பின்னர், நடிப்பை நிறுத்திவிட்டு படிக்க சென்றுவிட்டார்.
திரும்பி வந்தவர் தமிழில் விக்ரம் பிரபுவுடன் ‘வீர சிவாஜி’ படத்தில் ஜோடியாக நடித்தார் மலையாளத்திலும் தனது அக்கா ஷாலினி முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமான ஹீரோவான குஞ்சாக போபனுக்கே தானும் ஜோடியாக அறிமுகமாகி ஒரு படத்தில் நடித்தார். ஆனாலும் இரண்டு மொழிகளிலும் அவருக்கு எதிர்பார்த்த பெரிய வரவேற்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி விட்டார்.
இந்த நிலையில் தற்போது ஓவியக்கலை பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி உள்ளார் பேபி ஷாமிலி. திரைப்படங்களில் பொருத்தமான வாய்ப்பிற்காக காத்திருக்கும் காலகட்டத்தில்.., ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார். ஓவிய துறையில் மேதையான ஏ.வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார்
இவரது படைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களாகவும், சமூகத்தில் எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிப்பவர்களாக இடம் பிடித்திருக்கிறார்கள்..
தனது படைப்புகளை பெங்களூரு மற்றும் சென்னையில் ஓவிய கண்காட்சியில் காட்சிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார் ஷாமிலி.
அதைத் தொடர்ந்து துபாயில் உள்ள வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் கண்காட்சியாக பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார். இவரது படைப்புகளை பார்வையிட்ட பார்வையாளர்கள், இவரின் திறமையை வியந்து பாராட்டியதுடன், தங்களுடைய எண்ணங்களை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.