அமர கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சி கடந்த 70 வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் இந்த நாவலுக்கு உயிர் கொடுத்து திரைப்படமாக்கி அதை இரண்டு பாகங்களாக உருவாக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பொன்னியின் செல்வன் படக்குழுவின் பம்பரமாக சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியபோது பாகுபலி படம் போன்று ஏன் பொன்னியின் செல்வன் படத்தில் பிரம்மாண்டம் காட்டப்படவில்லை என்று இயக்குனர் மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த மணிரத்னம், “பிரமாண்டம் காட்டவேண்டும் என படம் எடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் நானும் நீங்களும் படித்த ஒரு நாவல். அமரர் கல்கி எழுதியுள்ளது போல், அதை நான் உங்களுக்கு உள்ளது உள்ளபடி எடுத்து படமாக காட்டியுள்ளேன். ” என்று கூறினார்.
அதேபோல பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள கதாபாத்திரங்களில் எந்த கதாபாத்திரத்தை மட்டும் தனியாக வைத்து படம் இயக்க விரும்புவீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியமானது தான் என்று கூறினார்.