1970க்கு முன்பாகவே புராண படங்களில் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. அதன்பிறகு கிட்டத்தட்ட இந்த 50 வருடங்களாக சமூகப் படங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஒரு பக்கம் கடவுள்களைப் பற்றிய திரைப்படங்களும் இன்னொரு பக்கம் கடவுளுக்கு தொண்டு செய்த அடியார்களை பற்றிய கதைகளையும் இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இன்றைய படைப்பாளிகளுக்கு உள்ளது,
அப்படி ஒரு கடமையாக நினைத்து தான் ஸ்ரீ ராமானுஜர் என்கிற கடவுளின் அடியாரான ராமானுஜர் துறவியை பற்றி ஒரு படமே தயாராகி உள்ளது. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது,
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் இராமானுஜர் வேடத்தில் நடித்திருப்பவருமான தி.கிருஷ்ணன் பேசியதாவது:- “இந்தப்படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறேன். இது ஒரு பீரியட் படம். படத்தின் டீசர் வெளியானபோது. ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். இளையராஜா சார் என்னை அழைத்து அதுப்பற்றி விசாரித்தார்.
2018ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்க வேண்டிய படம். பல்லேறு சூழல்களால் தாமதமாகிவிட்டது. படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது இயக்குனர் இறந்துவிட்டார். கேமராமேன் இறந்துவிட்டார். இப்படி நிறைய கஷ்டங்களை கடந்து இந்தப்படம் உருவாவதற்கு திரு வினோத் அவர்கள் படத்தின் கோ-டைரக்டர் மிகவும் உதவியாக இருந்தார். இது வெற்றி பெறாமல் நான் விடமாட்டேன். இராமானுஜர் மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்தப்படத்தை தயாரித்ததை நான் பாக்கியமாக நினைக்கிறேன்.
இளையராஜா சார் இந்தப்படத்தில் 5 பாடல்கள் தந்திருக்கிறார். விரைவில் அந்தப்பாடல்கள் நேரு ஸ்டேடியத்தில் லைவ்வாக இசையமைக்கப்படும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.
கலை இயக்குனர் மகி ரொம்பவே சிரமப்பட்டு செட் போட்டு கொடுத்தார். ஸ்ரீரங்கம் செட், திருப்பதி செட், சோழ மன்னன் அரண்மனை செட் என்று படத்திற்கு பிரமாண்டம் சேர்த்துள்ளார் கலை இயக்குனர் மகி. படத்தில் சோழ மன்னன் அரண்மனை காட்சி மட்டும் இருபது நிமிடங்கள் இடம்பெறுகிறது.
ஆயிரம் வருடங்களுக்கு முன் இராமானுஜர் சமூக நீதிக்காக என்னவெல்லாம் செய்தார் என்று இந்தப் படம் பார்க்கும்போது புரியும்” என்றார்.