90களில் மக்கள் நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்து வெள்ளிவிழா நாயகன் என்றும் கூட அழைக்கப்பட்டார். அப்படி அவரது வெற்றி படங்களில் வெற்றிக்கு பக்கபலமாக இசைஞானி இளையராஜாவின் இசையும் துணை நின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் கதாநாயகனாகவே சாமானியன் என்கிற படத்தின் மூலம் திரையுலகுக்கு திரும்பியுள்ளார் ராமராஜன். ஆர்.ராகேஷ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

அதே போல இசைஞானி இளையராஜாவும் 20 வருடங்களுக்கு பிறகு ராமராஜனின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பின்னணி இசை வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் புத்தாண்டு அன்று இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற ராமராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளையும் நேரில் பார்த்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா, இந்த படத்தில் வித்தியாசமான ராமராஜனை காட்டி உள்ளீர்கள்.. படம் நன்றாக வந்திருக்கிறது என்று பாராட்டியுள்ளார் இதனால் படக்குழுவினர் உற்சாகமாக திரும்பி உள்ளனர்.