தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு இணையாக தமிழ் திரை உலகில் நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தேர்தலும் எப்போதுமே ஒரு பரபரப்புடன் தான் இருக்கும். அந்த வகையில் இன்னும் சில நாட்களில் அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இரண்டு விதமான அணியினர் மோதுகின்றனர்.

வழக்கம்போல இந்த தேர்தல் அடையாறில் உள்ள அன்னை சத்யா ஸ்டுடியோ வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடம் போதுமான வசதி கொண்டது அல்ல. வேறு இடத்திற்கு குறிப்பாக அதே அடையாறில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் இந்த தேர்தலை நடத்தும்படி கோரிக்கை வைத்துள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.ஆர்.
இதற்கு காரணமாக அவர் கூறுவது கடந்த முறை கொரோனா தொற்று நிலவிய சமயத்தில் நடைபெற்ற தேர்தல் அன்னை சத்யா கல்லூரியில் தான் நடைபெற்றது. அங்கே வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான வசதிகள் இல்லை. அதேபோல தேர்தலில் வாக்களிப்பவர்களும் ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டு இட வசதி இன்றி நெரிசலுடன் தான் வாக்களித்தனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில் வாக்களித்த சின்னத்தம்பி பட தயாரிப்பாளர் கேபி பிலிம்ஸ் பாலு அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மறுநாளே மருத்துவமனையில் அட்மிட் ஆகி கொரோனா தொற்று என கண்டறியப்பட்டு உயிரையே இழந்து விட்டார் என்பது வேதனையான உண்மை.
இப்போதும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால் மீண்டும் அன்னை சத்யா கல்லூரியில் இட நெரிசலுடன் இந்த தேர்தலை நடத்துவதற்கு பதிலாக அதே அடையாறு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் போதுமான இடவசதி இருக்கிறது. எவ்வளவு கார்களை வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். சினிமாவுக்கு தொடர்புடைய இடம் என்பதால் தொடர்ந்து எல்லா தேர்தல்களையும் அங்கேயே நடத்திக் கொள்ளலாம்.
தமிழக அரசும் திரைப்படத்துறைக்கு ஆதரவாக இருப்பதால் அனுமதி பெறுவதும் கஷ்டமாக இருக்காது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் சூழ்நிலையில் தேர்தல் அதிகாரிகள் எல்லா சூழலையும் கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்தும் இடத்தை எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி வளாகத்திற்கு மாற்றுவது பொருத்தமானதாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
கே.ஆர் சொல்வதும் நல்ல யோசனையாக தான் இருக்கிறது என்று திரை உலகிலேயே பலர் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இனி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.