சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடுவதற்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிய காலம் மாறி, குறும்படங்கள் மூலமாக நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலமாக வாய்ப்பு பெறும் முறை பல நடிகர்களுக்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதில் கடந்த மாதம் தமிழில் வெளியான குடிமகான் என்கிற படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் சிவன் சற்றே வித்தியாசமானவர்.
தான் நடிகனாக வேண்டும் என்கிற கனவில் சினிமாவில் நுழைந்தவர், தானே குடிமகான் என்கிற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்தார். அதே சமயம் வழக்கமான அறிமுக ஹீரோ போல ஆர்ப்பாட்டமான நாலு பாட்டு, நாலு சண்டை, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, காதலியை துரத்தி காதலிப்பது போன்று எந்த கோணங்கித்தனமான காட்சிகளும் இல்லாமல் ஒரு கதையின் நாயகனாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
சொல்லப்போனால் நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்துடன் மனம் விட்டு பார்த்து ரசிக்கும் படமாக குடிமகான் படம் அமைந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் ரசிகர்களிடம் சென்றடைவதற்குள் தியேட்டர்களிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.
இருந்தாலும் இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்கிற நம்பிக்கையில் இருக்கும் விஜய் சிவன், இந்த படம் தான் எனது நடிப்பிற்கான விசிட்டிங் கார்டு.. பலரும் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார்கள்.. இந்த படம் பல இயக்குனர்களின் கண்களில் படும்போது எனது நடிப்பிற்கான அங்கீகாரமும் அதன் மூலம் எனக்கான வாய்ப்பும் தேடி வரும் என உறுதியாக நம்புகிறேன் என்கிறார்.