ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகும் படங்கள் என்றாலே ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், கார்த்தி ஆகியோரின் படங்களுக்கு அடுத்ததாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் படங்களாகவே இடம் பிடித்து வருகின்றன.
குறிப்பாக அவர் இயக்கிய காஞ்சனா வரிசை படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் ஒரு மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு அவர் நடித்துள்ள ருத்ரன் என்கிற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பண்டிகை ரிலீஸ் ஆக வெளியாகிறது.
ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் உருமாறியுள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக இந்த படத்தின் ரிலீஸ்க்கு ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொல்லப்போனால் இந்த படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமைகளை பெற்ற நிறுவனம் அது குறித்த ஒப்பந்தம் தொடர்பாக ருத்ரன் படத்தை வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
இதை விசாரித்த நீதிமன்றம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை இந்த படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. அதேசமயம் சோசியல் மீடியாவில் இப்போது வரை இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்ல இப்போதும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் இருதரப்பிற்குமான பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி சொன்னபடி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.