கடந்த 2019ல் மிகவும் ஆர்வமுடன் துவங்கப்பட்ட படம் இந்தியன் 2. எவ்வளவு தாமதமானாலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தே தீருவது என முடிவு செய்த இயக்குனர் ஷங்கர் படத்தை துவங்கி படப்பிடிப்பையும் நடத்தி வந்தார், இடையில் சில பிரச்சினைகள் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த கொரோனா அலை ஆகியவற்றால் இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டு நின்றது.
அதை தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமலின் இந்த கமர்சியல் வெற்றி உறங்கிக் கிடந்த இந்தியன் 2 படத்தையும் உடனடியாக ஆரம்பிக்கும் சூழலை உருவாக்கியது.
இதற்கு இடையே தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தை ஆரம்பித்து இயக்கி வந்தார் இயக்குனர் ஷங்கர். தற்போது இந்த இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தைவான் நாட்டில் நடத்தி முடித்துள்ளார்கள். இதை தொடர்ந்து அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இதற்காக கமல் உள்ளிட்ட படக்குழுவினர் தென்னாப்பிரிக்காவில் இறங்கியுள்ளனர்.
தன்னுடைய குழுவினரை சோசியல் மீடியா மூலமாக அறிமுகப்படுத்தி வைக்கும் விதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள கமல் இதுதான் சேனாபதியின் சேனை என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.