இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொடர்ந்து காமெடி காட்சிகளில் இணைந்து நடிக்கும் அளவிற்கு திறமைமிக்க நடிகரான யோகிபாபு, சீனியர் ஹீரோக்கள், வளரும் நடிகர்கள் என பாகுபாடு பார்க்காமல் இணைந்து நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் முக்கியமான கதையம்சம் கொண்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அதிலும் வெற்றி பெற்று வருகிறார். அது மட்டும் அல்ல இயக்குனர் அட்லியின் படங்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்த யோகிபாபு தற்போது அவர் இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஜவான் என்கிற படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார்.
தற்போது தமிழ் மற்றும் இந்தியை தொடர்ந்து மலையாளத்தில் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் யோகி பாபு.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய விபின் தாஸ் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பிருத்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.