தற்போது தென்னிந்திய சினிமாவில் வரலாற்று திரைப்படங்கள் அதிகம் உருவாகும் காலகட்டம் என்று சொல்லலாம். பாகுபலி படத்தை தொடர்ந்து, அந்த படம் கொடுத்த நம்பிக்கையில். அந்த படத்தில் வெற்றி கொடுத்த தைரியத்தில் பலரும் வரலாற்று படங்களை எடுக்க முன் வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 50 வருடங்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த பொன்னியின் செல்வம் நாவலை படமாக்கும் முயற்சியை கையில் எடுத்து அதன் முதல் பாகத்தையும் வெளியிட்டு விட்டார் இயக்குனர் மணிரத்னம். அதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது புதியவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள வரலாற்றுப் படமான யாத்திசை என்கிற படம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர், இந்த படத்தின் உருவாக்க காட்சிகள் அனைத்தும் இந்த படம் குறித்து பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக புதிய இயக்குனர், புதிய நடிகர்கள் என்கிற கூட்டணியில் இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தை, கிராபிக்ஸ் தொழில் நுட்பங்கள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி, நல்ல கதை அம்சத்துடன் எடுப்பது சாத்தியமா என்கிற வியப்பையும் இந்த படக்குழுவினர் ஏற்படுத்தி உள்ளனர்.
படத்தின் சில காட்சிகளையும் அதை உருவாக்கிய விதத்தையும் பார்க்கும் போது தமிழ் சினிமாவுக்கான ஒரு பாகுபலி ஆக இந்த படம் அமையுமா என்கிற ஒரு கேள்வியை எழுப்பி உள்ளது.. இந்த படம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும்போது நமக்கு கிடைக்கும் பதில் சாதகமாக கூட இருக்கலாம்.