நடிகர் சரத்குமாரை சினிமாவில் பிரபல ஹீரோ என்கிற அளவில் பலருக்கும் தெரிந்தாலும் அவர் திரையுலகில் நுழைவதற்கு முன்பு ஒரு பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தவர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்டவர் சரத்குமார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சரத்குமார் தொடங்கியுள்ளார்.
தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரத்குமார் கூறும்போது, “இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன் என்னிடம் உள்ள இந்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்று விடலாம் என்று கூறினார்கள்.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் கைபேசி, அமேசான் கிண்டில், ஐபேட், மடிக்கணினி ஆகியவைகளால் புத்தக வாசிப்பு குறைந்துள்ளது. இதனால் புத்தக வாசிப்பை மேலும் முன்னெடுத்து செல்லவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

இதே போல பிறரிடம் புத்தகங்கள் அதிகமாக இருந்தால் அவர்களும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று சரத்குமார் கூறினார்