தமிழ் திரை உலகில் வெண்ணிலா கபடி குழு என்கிற படம் மூலம் வெற்றிகரமாக இயக்குனராக அடி எடுத்துவைத்தவர் இயக்குனர் சுசீந்திரன். இதைத்தொடர்ந்து தனது 20 வருட திரையுலக பயணத்தில் கார்த்தி. விக்ரம். விஷால் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய சுசீந்திரன் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வள்ளிமயில் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பதிவுகள் என்கிற குறும்பட விழாவில் பங்கேற்ற சுசீந்திரன் அங்கு அவர் இளம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “நான் முதன்முறையாக 2003ல் ஒரு குறும்படம் எடுத்தேன். ஆனால் அதை திரையிடுவதற்கு எனக்கு அப்போது சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இன்று மாணவர்களுக்கு குறும்படங்களை திரையிட பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இன்றைய உதவி இயக்குனர்கள் ஓடிடி தளத்தை பயன்படுத்தி பல்வேறு வெற்றிகளை குறித்து வருகின்றனர். தினமும் தொழில்நுட்பம் மாறி வருகிறது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களை அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது முதல் படத்தை பொக்கிஷம் போல பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.