இறுதிச்சுற்று படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கி அடுத்தடுத்து நல்ல கதையம்சம் மற்றும் கதாபாத்திரங்களை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மாதவன். அந்த வகையில் கடந்த வருடம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்த ராக்கெட்ரி என்கிற படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாதவன். இந்தப்படத்தையும் அவரே இயக்கியும் இருந்தார்.
இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் மாதவனின் நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களும் குவிந்தன. இதைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் மாதவன்.
இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு விஞ்ஞானியின் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமல்ல, இந்தியாவின் எடிசன் என பாராட்டப்பட்ட மாமேதை ஜிடி நாயுடுவின் கதாபாத்திரத்தில் தான் மாதவன் நடிக்க இருக்கிறார்.
இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதே சமயம் இந்த படத்தை யார் இயக்குகிறார்கள்? அல்லது மாதவனே இந்த படத்தையும் இயக்குகிறாரா என்பது குறித்து விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.