சமந்தா நடிப்பில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சாகுந்தலம். தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக உள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகன் தேவ் மோகன்.
“முதன்முதலாக எனக்கு தொலைபேசி மூலமாக இந்த படத்தின் கதையை சொன்னவர் படத்தின் தயாரிப்பாளர் நீலிமா தான். ஒரு தயாரிப்பாளர் படத்தின் கதையை ஹீரோவிடம் கூறுவது இப்போதைய நாட்களில் இதுதான் முதல் முறையாக இருக்கும்.
அதைத்தொடர்ந்து ஹைதராபாத் சென்றபோது இயக்குனர் குணசேகர் இந்த படம் குறித்து விரிவாக என்னிடம் கூறினார். அதன் பிறகு இந்த படத்திற்காக கத்திச்சண்டை, குதிரை ஏற்றம் என இரண்டு மாதங்கள் முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
அது மட்டுமல்ல, இது புராண கால கதாபாத்திரம் என்பதால் ஒவ்வொரு காட்சிகளிலும் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர் குணசேகர் எனக்கு தெளிவாக விளக்கி விடுவார். அதனால் படத்தில் நடிப்பது எளிதாக இருந்தது.
இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்த படத்திற்கு அவர் ஒரு முக்கியமான தூண் என்று சொல்லலாம்.
படப்பிடிப்பின் போது நானும் அவரும் காட்சிகளை படமாக்குவதற்கு முன்பெ அது குறித்து பேசிக்கொள்வோம். எனக்கு நிறைய விஷயங்களை அவர் கற்றுக் கொடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார் தேவ் மோகன்.