நடிகை சமந்தா நடிப்பில், வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் சாகுந்தலம். புராண கால காவியமான சாகுந்தலம் காவியத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார்

மலையாள திரையுலகை சேர்ந்த தேவ் மோகன் என்னும் இளம் நடிகர் இதில் கதாநாயகனாக சமந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருப்பதை முன்னிட்டு இதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத், சென்னை என மாறி மாறி பறந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் உள்ள கொச்சினுக்கு சென்று இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளை கொச்சியில் உள்ள பிரபலமான லுலு மாலில் நடத்தி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பேசும்போது, “எனது தாய் கேரளாவில் உள்ள ஆலப்புழாவை சேர்ந்தவர் ஆனால் அவர் ஏனோ எனக்கு மலையாளம் கொஞ்சம் கூட கற்றுத் தரவில்லை. எனக்கு எப்போதுமே மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என ஆசையாக இருக்கும்.

எனது நடிப்பை மெருகேற்றிக் கொள்வதற்கு கூட நான் அடிக்கடி மலையாள படங்களை தான் பார்ப்பேன். மலையாளத்தில் எனக்கு பிடித்தமான நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளது.

அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதன் மூலம் உடனடியாக மலையாளத்தையும் கற்றுக் கொள்வேன் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா.