V4UMEDIA
HomeReviewவிடுதலை ; விமர்சனம்

விடுதலை ; விமர்சனம்

இயக்குனர் வெற்றிமாறன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. நடிகர் தனுஷை வைத்தே தொடர்ந்து படங்களை இயக்கி வந்த வெற்றிமாறன் திடீரென நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக்கி அதிலும் இரண்டு பாகங்களை கொண்ட படத்தை இயக்குகிறார், அதிலும் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது போன்ற விஷயங்கள் இந்த படத்தில் மீதான ஆர்வத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன.

அதுமட்டுமல்ல இசைஞானி இளையராஜாவுடன் வெற்றிமாறன் முதன் முதலாக கூட்டணி சேர்ந்து இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் மீதான எதிர்பார்பை  இன்னும் அதிகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்துள்ளதா ? பார்க்கலாம்

மலைப்பகுதி ஒன்றில் கனிம வளங்கள் தோண்டுவதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் இயற்கை வளங்களை சுரண்ட விடமாட்டோம் என அந்தப் பகுதி மலைவாழ் மக்கள் பிரதிநிதி விஜய்சேதுபதி தமிழக மக்கள் படை என்று இயக்கத்தை உருவாக்கி எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தனியாருக்கு ஆதரவாக பாதுகாப்பு கொடுக்க வரும் போலீசாரையும் அவ்வப்போது கொல்கிறார். இந்த நிலையில் ரயிலுக்கு குண்டு வைத்து மிகப்பெரிய விபத்தையும் ஏற்படுத்துகிறார்கள்.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் அவர்களது கூட்டாளிகளை வேட்டையாட அதிரடி படையினர் குவிக்கப்படுகின்றனர். அதில் ஒரு ஆளாக சூரி பணியில் சேர்கிறார். உயர் அதிகாரிக்கு ஜீப் டிரைவராக டூட்டியில் சேர்ந்தாலும் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடக்கவில்லை என அடிக்கடி தண்டனைக்கு ஆளாகிறார். அந்த நேரத்தில் அவரது மனதுக்கு இதமாக அந்தப்பகுதியில் வசிக்கும் மலைவாசி பெண்ணான பவானி ஸ்ரீ மீது காதல் ஏற்படுகிறது.

அதுவரை முகம் யார் என்றே தெரியாமல் இருந்த விஜய்சேதுபதியின் உருவத்தோற்றம் இப்படித்தான் இருக்கும் என ஒரு உருவம் வரையப்பட ஏற்கனவே அவரை தான் சந்தித்து இருப்பதை உணர்கிறார் சூரி. இதற்கிடையே விஜய்சேதுபதிக்கு மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் அடைக்கலம் கொடுக்கிறார்கள் என போலீசார் பெண்கள் அனைவரையும் அள்ளிக் கொண்டு வந்து சித்திரவதை செய்கின்றனர். அதில் சூரியன் காதலியான பவானி ஸ்ரீயும் சித்திரவதைக்கு ஆளாகிறார்.

அதை காண மனம் பொறுக்காத சூரி இதிலிருந்து அவரை விடுவிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரால் அது முடிந்ததா ? விஜய்சேதுபதியை பிடிப்பதற்கு சூரி தன் பங்கிற்கு ஏதாவது செய்தாரா ? உயர் அதிகாரிகள் சூரியின் பேச்சை காது கொடுத்தாவது கேட்டார்களா ? என்ன நடந்தது என்பதை இந்த முதல் பாகத்தில் கூறியுள்ளார்கள். இரண்டாம் பாகத்தில் என்ன சொல்லப் போகிறோம் என்பதையும் நமக்கு தெளிவாகவும் காட்டிவிடுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும் படத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொள்ளும் விபத்தை காட்டியிருப்பார்கள். தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட பேருந்து விபத்து காட்சிகளிலேயே அதுதான் இப்போது வரை ஹைடைட்டாக இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் துவக்க காட்சியிலேயே காட்டப்படும் ரயில் விபத்து காட்சி இந்திய சினிமாவிலேயே இந்த படத்தில் காட்டப்பட்டிருப்பது போல வேறு எதிலும் காட்சிப்படுத்தப்படவில்லை என்று சொலும் அளவுக்கு ஒரு ரயில் விபத்தின் கோரத்தை அப்படியே கண் முன் நிறுத்தி நம் மனதை பதைபதைக்க வைத்து விடுகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

இதுவரை நாம் பார்த்து வந்த நகைச்சுவை நடிகர் சூரி எங்கே என்று படம் முழுக்க தேடினாலும் அவரை காண முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த படத்தில் அந்த கான்ஸ்டபிள் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் சூரி. சென்டிமென்ட், நேர்மை, இயலாமை ,அதை தாங்கிக் கொள்ள முடியாத கோபம் என அனைத்தையும் சம அளவில் வெளிப்படுத்தி ஒரு கதையின் நாயகனாக பாஸ்மார்க்.. இல்லையில்லை ஃபர்ஸ்ட் மார்க்கே வாங்கி விடுகிறார் சூரி.

படத்தில் கதையை உணர்ந், தன் கதாபாத்திரத்தின் தேவையறிந்துது இதில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்சேதுபதி இந்த முதல் பாகத்தில் கொஞ்சம் காட்சிகளே மட்டுமே வருகிறார். அந்த குறையை ஈடு கட்டும் விதமாக இரண்டாம் பாகத்தில் அவருக்கு அதிகமான காட்சிகள் இருக்கின்றன என்பது இறுதியில் காட்டப்படும் புரோமோவில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ அந்த மலைப்பகுதியைச் சேர்ந்த கிராமத்து பெண்ணாகவே மாறியுள்ளார். இவரைவிட ஒரு பொருத்தமான தேர்வு இன்னொன்று இருக்க முடியுமா என கேட்கும் விதமாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் பவானி ஸ்ரீ.

காவல்துறை உயர் அதிகாரிகளாக சேத்தன் மற்றும் கௌதம் மேனன் இருவரும் இருவித நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சேத்தன் ஒரு விதமான குரூரத்தை வெளிப்படுத்துகிறார் என்றால் கௌதம் மேனன் அதையே டீசன்டாக இன்னொரு விதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக நடிகர் சேர்த்தனின் திறமையை இந்த படத்தில் முழுமையாக வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இனி சேத்தனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்பதும் உறுதி. கௌதம் மேனனும் அலட்டிக் கொள்ளாமல் அற்புதமாக நடித்துள்ளார்.

இவர்கள் தவிர சூரிய உடன் பணி புரியும் ஏட்டையா, அதற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரம் பண்ணும் சவுச்சவ் அதிகாரி மூணார் ரமேஷ் என படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து அவர்களும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

படத்தில் இடம்பெற்றுள்ள அந்த ரயில் விபத்து காட்சியும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்கள். அதேபோல நிஜத்தில் இதற்கு முன்பு இதுபோன்று சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதையும் இந்த படத்தை பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி காட்சிகளையும் பார்க்கும் போது உண்மையிலேயே மனம் கொதிக்கிறது. அதுதான் இந்த படத்திற்கான வெற்றியும் கூட.

இளையராஜாவின் பின்னணி இசை படம் முழுவதும் எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட விடாமல் தாங்கிக் கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் கடின உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்பட்டுள்ளது. சிறுகதையோ நாவலோ எதுவும் வெற்றிமாறன் கைகளுக்கு சென்றால் ஒரு அற்புதமான திரைப்படமாக அது உருவாகும் என்பதற்கு மீண்டும் இந்த விடுதலை திரைப்படம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

Most Popular

Recent Comments