இயக்குனர் வெற்றிமாறன் டைரக்சனில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக பவானி ஸ்ரீ என்பவர் நடித்துள்ளார். முதன் முறையாக இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் வெற்றிமாறன். இந்த படம் வரும் மார்ச்-31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த பவானி ஸ்ரீ அந்த அனுபவம் குறித்து கூறும்போது, “காட்டிற்குள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதே புதிய அனுபவமாக இருந்தது. காட்டிற்கு நான் புதியவள். அதே சமயம் அங்கே இருந்த நாட்கள் எல்லாம் தியானம் செய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.
இயக்குனர் வெற்றிமாறன் சார் அங்கே இருக்கும் செடி கொடி பூக்களுக்கு கூட எந்த விதமான துன்பமும் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
நான் இசை குடும்பத்தில் இருந்து வந்தவள் தான் என்றாலும் என் குடும்பத்தில் நான் மட்டும் இசையை முறைப்படி கற்றுக் கொள்ளவே இல்லை. இசைஞானி இளையராஜா கூட இந்த படத்தில் ஒரு பாடலை பாடுகிறாயா என்று கேட்டார். ஆனால் நான் அந்த அளவுக்கு சிறந்த பாடகர் இல்லை என்று கூறி மறுத்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.