சமுத்திரக்கனி இயக்குனராக இருந்தாலும் அவரது நடிப்புக்கு என ஒரு மார்க்கெட் உருவாகி விட்டதால் டைரக்ஷன் பணிகளை குறைத்துக்கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான குணச்சித்திர நடிகராக மற்றும் வில்லனாக நடித்து வருகிறார்.

இடையில் அவ்வப்போது கிடைக்கும் சமயங்களில் டைரக்சனிலும் இறங்கும் சமுத்திரக்கனி கடந்த வருடம் வினோதய சித்தம் என்கிற படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக இந்த பாடல் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது.

அதே சமயம் இந்த படம் தெலுங்கு முன்னனி நடிகர் பவன் கல்யாணுக்கு ரொம்பவே பிடித்துப்போக, தற்போது இதை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருகிறார். தெலுங்கிலும் இந்த படத்தை சமுத்திரக்கனியே தான் இயக்கி வருகிறார்.

அதுமட்டுமல்ல இந்த படம் வரும் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பவன் கல்யாண் நடிப்பில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் உள்ள ஹரிஹர வீரமல்லு என்கிற படத்தை இயக்கி வரும் இயக்குனர் கிரிஷ் மற்றும் அடுத்ததாக பவன் கல்யாண் படத்தை இயக்குவதற்காக கிரீன் சிக்னல் கொடுத்து வைத்துள்ள இயக்குனர் ஹரிஷ் சங்கர் இருவரும், இவ்வளவு குறுகிய காலத்தில் பவன் கல்யாணை வைத்து படம் இயக்கி ரிலீஸ் தேதியையும் அறிவிக்க வைத்துவிட்ட இயக்குனர் சமுத்திரக்கனியின் இந்த வேகத்தை பார்த்து பிரமித்து போய் இருக்கின்றனர்.