இயக்குனர் அமீர் திரையுலகில் மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானதில் இருந்து ராம், பருத்திவீரன் என அவரது படங்களின் வெற்றியில் பக்கபலமாக இருந்து வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர்களுக்கிடையேயான நட்பு மிகவும் நெருக்கமானது.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக யுவன் சங்கர் ராஜா, ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்து வருகிறார். தற்போது முதல்முறையாக அமீருடன் கூட்டணி சேர்ந்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அமீரின் அமீர் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள யுவன் சங்கர் ராஜா விரைவில் இது குறித்து இன்னும் அதிக தகவல்கள் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த படத்தை அமீர் இயக்குகிறாரா அல்லது இந்த படத்தில் அமீர் நடிக்கிறாரா அல்லது இந்த படத்தை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறாரா என்பது குறித்த விபரங்களை எல்லாம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம். அதேசமயம் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு என்கிற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது