V4UMEDIA
HomeNewsKollywoodசந்தன வீரப்பன் மகளை ஆதரிப்பேன் ; மாவீரன் பிள்ளை விழாவில் பேரரசு ஆவேசம்

சந்தன வீரப்பன் மகளை ஆதரிப்பேன் ; மாவீரன் பிள்ளை விழாவில் பேரரசு ஆவேசம்

ஒரு காலத்தில் தமிழக போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சந்தன கடத்தல் வீரப்பன். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அதிரடி போலீசார் சந்தன வீரப்பனை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த நிலையில் அவரது மகளான விஜயலட்சுமி திரையுலகில் அடியெடுத்து வைத்து ‘மாவீரன் பிள்ளை’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கே என் ஆர் ராஜா தயாரித்து, இயக்கி, நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் “ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் யார் என பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள். படம் என்ன கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள். நம் ஊரில் முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம்.. வீரப்பன் மகளும் நடிக்கலாம்.. சினிமா யார் என்றாலும் ஏற்றுக்கொள்ளும்.. அந்த வகையில் வீரப்பனின் மகன் விஜயலட்சுமியை ஒரு புதுமுகமாக நாம் ஆதரிப்போம். என்றார்.

மேலும் அவர் கூறுகையில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுவிலக்கு என்கிற வாக்குறுதியை கொடுத்துவிட்டு, அதே மதுவை கொடுத்து தான் ஓட்டு போட சொல்கிறார்கள். இந்த படத்தில் ஆலயமணி எழுதிய சாராயம் அபாயம் என்கிற பாடல் ஒரு அபாய மணி. இந்த பாடலை டாஸ்மாக் முன்பாக ஒலிக்க விட்டு மது ஒழிப்பு பிரச்சாரம் கூட செய்யலாம்.

மதுவிலக்கை ரத்து செய்வதாக கூறினால் ஓட்டுப் போட மாட்டார்கள் என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் பேசும்போது போதைப் பொருள்கள் லிஸ்டில் மதுவை சேர்ப்பதில்லை. மதுவை விற்கலாம் என்றதால் இனி வரும் நாட்களில் டாஸ்மாக்கை போல கஞ்சா கடையும் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆன்லைன் ரம்மி மூலமாக எங்கேயோ எப்போதோ ஒன்றிரண்டு பேர் இறக்கிறார்கள்.. ஆனால் குடியால் தினசரி எத்தனையோ பேர் உடல் பாதிப்பு, விபத்து என உயிர் இழக்கிறார்கள்.. ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்காக சட்டசபையில் குரல் கொடுப்பவர்கள், ஏன் மதுவை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை..

சாராயம் விற்கும் காசில் அரசாங்கம் நடத்துவது கேவலம். பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை.. ஓசி பஸ்ஸும் தேவையில்லை.. சாராயம் விற்ற காசில் எதுவும் எங்களுக்கு பண்ண வேண்டாம். பாவத்தை எங்கள் தலையில் கட்டாதீர்கள்.. கேளிக்கை வரி என்பது கேலிக்கூத்து வரியாக மாறிவிட்டது. இந்த படம் சமுதாயத்துக்காக எடுக்கப்பட்ட படம்” என்று கூறினார்.

Most Popular

Recent Comments