V4UMEDIA
HomeNewsKollywoodதமிழில் படம் இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்

தமிழில் படம் இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்

மலையாளத்தில் பிரேமம் என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் அல்போன் புத்திரன். அந்த படம் இங்கே தமிழகத்தில் சென்னை சத்யம் தியேட்டரில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலமாக தென்னிந்திய திரை உலகத்திற்கு சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என மூன்று முத்தான கதாநாயகிகளை அறிமுகப்படுத்திய பெருமை இவரைத்தான் சேரும்.

அதுமட்டுமல்ல அதற்கு முன்னதாக இவர் இயக்கிய நேரம் திரைப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவானது. இந்தப் படத்தின் மூலம் நஸ்ரியாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதும் இவர்தான். குறிப்பாக நடிகர் நிவின்பாலிக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்க பக்க பலமாக நின்றவர் அல்போன்ஸ் புத்திரன்.

பிரேமம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக படம் இயக்காமல் இருந்த இவர், பிரித்விராஜ் – நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்த படம் வெற்றியைப் பெற தவறியது.

இதைத்தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்தை தமிழில் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார் அல்போன் புத்திரன். இந்த படத்தை அவரது நீண்ட நாள் நண்பரான ராகுல் என்பவர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை தயாரிப்பதன் பின்னணியில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி இருக்கிறார் என்பதை அறிவித்து அவருக்கு நன்றியும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

அது மட்டுமல்ல வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடிகர் சூரி சிலேட்டில் உள்ள கோட்டை அழித்து மீண்டும் முதலில் இருந்து கணக்கை துவங்கலாம் என்று கூறுவாரே, அதுபோல தற்போது இதற்கு முன் நான் இயக்கிய படங்களை எல்லாம் மறந்துவிட்டு இப்போதுதான் முதல் படம் இயக்குகிறேன் என்பது போல இந்த படத்தை துவங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

Most Popular

Recent Comments