உலகெங்கிலும் உள்ள பல்வேறு மொழிகளை சேர்ந்த படைப்பாளிகளுக்கு எப்போதுமே ஆஸ்கர் விருது பெறுவது தான் லட்சியமாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு என்கிற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது.
அதேபோல தமிழகத்தில் முதுமலை யானைகள் முகாமில் யானைகளை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதியினரின் வாழ்க்கையை சொல்லும் விதமாக உருவாகியிருந்த தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்டரி பிரிவிலும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இந்த டாக்குமென்ட்ரியை கார்த்திகி கொன்சால்வெஸ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தியாவெங்கும் இந்த இரண்டு படக் குழுவினர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்தை இயக்கிய கார்த்திகி கொன்சால்வெஸ் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதை தொடர்ந்து தலைமைச் செயலகம் சென்ற கார்த்திகி கொன்சால்வெஸ் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தார். அவரை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த தமிழக முதல்வர் அவருக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் காசோலையை பரிசாக வழங்கினார்.