சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ல் வெளியான படம் சூரரைப்போற்று.. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் சுயசரிதையை மையப்படுத்தி உருவாகி உருவாகியிருந்த இந்த படம் தியேட்டர்களில் வெளியாகாதபடி கொரோனா தாக்கம் நிலவிய காரணத்தால் நேரடியாக ஓடிடியிலேயே ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆனால் அந்த சமயத்தில் ஓடிடியில் வெளியான படங்களிலேயே அதிக அளவு பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட படமாக சூரரைப்போற்று படம் அமைந்தது. இந்த படத்திற்கு சமீபத்தில் நான்கு பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்தன.
இந்த நிலையில் கடந்த வருடமே சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டிய நடிகர் அக்ஷய்குமார் தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் இந்த படத்தை சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார்.
இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் புரடச்சன் நம்பர் 27 என தற்காலிக டைட்டில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.