வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இந்த படம் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாக இருக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த படத்தில் சூரி காட்டுப்பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் ஆகவும் நடிகர் விஜய்சேதுபதி போலீசாரின் அடக்குமுறைக்கும் டார்ச்சருக்கும் எதிராக குரல் கொடுக்கும் பெருமாள் வாத்தியார் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து நடிகர் சூரி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, “இறைவன் அருளால், உங்கள் அனைவரின் நல்லாசிகளுடன், இன்னும் பத்து நாட்களில் வெள்ளித்திரையில் உங்கள் பார்வைக்கு..” என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.