கடந்த சில வருடங்களாக வரலாற்று படங்களும் புராண படங்களும் தற்போது இருக்கும் நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகின்றன. அந்த வகையில் சிறு வயதில் பாட புத்தகங்களில் படித்த சாகுந்தலம் புராணக்கதை தற்போது அதே பெயரிலேயே தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
மகேஷ்பாபுவை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து, ராணி ருத்ரமாதேவி என்கிற வரலாற்று படத்தையும் இயக்கிய குணசேகர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் கதாநாயகியாக சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். கதாநாயகன் துஷ்யந்த மகாராஜா கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார். இதுதவிர அதிதி பாலன், மோகன்பாபு, மதுபாலா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு படகோட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கிற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் சாரங்கி என்கிற படகோடியாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். சொல்லப்போனால் இதுவரை பிரகாஷ்ராஜ் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் என்று கூட இதை கூறலாம்.
ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது துவங்கியுள்ளன.