உலகெங்கிலும் உள்ள சினிமா கலைஞர்களின் கனவாக இருப்பது, மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை பெறவேண்டும் என்பது தான். பெரும்பாலும் இந்த விருதுகள் அமெரிக்க, ஆங்கில, கொரிய, ஈரானிய படங்களுக்கே கிடைத்து வந்தன. இதில் ஒரு ஆறுதலாக கடந்த 2009இல் ஸ்லம் டாக் மில்லியனர் என்கிற ஆங்கில படத்திற்காக இசையமைத்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கும் அந்த படத்தில் சவுண்டு இன்ஜினியராக பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.
அதை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நம் படங்கள் ஏதாவது ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ள செல்வதும் பின் அதிலிருந்து ஒதுக்கப்படுவதுமாக கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து வந்தது. பாகுபலி படங்களுக்கும் கூட இதே தான் நடந்தது.
இந்த நிலையில் கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் நிச்சயம் ஆஸ்கர் ரேசில் ஏதோ ஒரு விருதையாவது தட்டிச்செல்லும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
அதற்கு கட்டியம் கூறுவது போல இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் பல விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை அள்ளியது. ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொள்ள சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் தேர்வாகியது.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணியும் இந்த பாடலை எழுதிய சந்திரபோஸும் பெற்றுக் கொண்டனர்.
இந்த விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் ரசிகர்களும் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.