நடிகர் தனுஷை பொருத்தவரை நடிப்பிற்கு மொழி ஒரு தடையில்லை என நினைப்பவர். அதனால் தான் தற்போது ஹாலிவுட் வரை அவரால் கொடி கட்டி பறக்க முடிகிறது. அந்த வகையில் முதன் முதலாக நேரடி தெலுங்கு படமாக ஒரு தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி டைரக்ஷனில் உருவான வாத்தி என்கிற படத்தில் நடித்தார் தனுஷ்.
இந்த படம் தெலுங்கில் சார் என்கிற பெயரில் வெளியானது. கதாநாயகியாக சம்யுக்தா நடித்திருந்தார். ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.
90களின் இறுதியில் கல்வி முறையில் ஏற்பட்ட சில மாற்றங்களை தனி ஒரு ஆசிரியராக நின்று போராடி எப்படி மாணவர்களின் படிப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக ஒரு ஆசிரியர் நிற்கிறார் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.
இதனால் இந்த படம் மாணவர்களிடம் மட்டுமல்ல பெற்றோர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகி தற்போதும் திரையரங்குகளில் வாத்தி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், “தனுஷ் எங்களது ‘வாத்தி’யாக இருந்தால் நாங்கள் அவருடைய வகுப்பை அட்டென்ட் செய்வதற்காக உடற்கல்வி பீரியடை கூட விட்டுக்கொடுக்க தயார்” என்று ஒரு நகைச்சுவை கலந்த கேப்சனுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.