தமிழ் சினிமாவில் சத்யராஜ், கவுண்டமணி போன்று அதற்கு பிறகு காமெடியில் களைகட்டிய ஜோடி என்றால் அது சிவகார்த்திகேயன், சூரி ஜோடி தான். ஆனால் சமீபகாலமாக சூரி கதையின் நாயகனாக நடிக்கும் விதமாக தனது பாதையை மாற்றிக் கொண்டதால் இந்த ஜோடியின் அட்டகாசங்களை தொடர்ந்து பார்க்க முடியவில்லை.
அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை என்கிற படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் சூரி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இதன் முதல் பாகமும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொட்டுக்காளி என்கிற படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்கிறார். ஆச்சரியமாக இந்த படத்தை சூரியின் நண்பரான சிவகார்த்திகேயனே தனது சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.
ஏற்கனவே நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான பல விருதுகளை பெற்ற கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் என்பவர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் மலையாள இளம் நடிகை அண்ணா பெண் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, “எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்த படத்தில் இணைந்து பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும் அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன்” என்று கூறியுள்ளார்