மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் லியோ. திரிஷா கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் பிரியா ஆனந்த், அபிராமி வெங்கடாசலம், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதற்கு முன்னதாக இவர் விஜய் நடித்த நண்பன், பீஸ்ட் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இந்த லியோ படத்திலும் பணியாற்றி வரும் மனோஜ் பரமஹம்சா, இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமா பயன்படுத்தாத ஒரு அதிநவீன கேமராவை முதன்முறையாக பயன்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

ராப்டார் எக்ஸ் எல் என்கிற அந்த அதிநவீன கேமராக்களோடு இரண்டு ராப்டார்கள் மற்றும் பேபி கமோடாவையும் பயன்படுத்தி இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். நிச்சயமாக இந்த டெக்னிக்கல் விஷயம் லியோ படத்திற்கு ஹைலைட்டான அம்சமாக அமையும் என்பது சந்தேகம் இல்லை.