எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் சி சத்யா. அதை தொடர்ந்து குறிப்பிடத்தக்க படங்களுக்கு இசையமைத்துள்ள சி.சத்யா அடுத்ததாக எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் உருவாக விரைவில் வெளியாக இருக்கும் நாடு என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இவரது மகள்களான சினேகா மற்றும் வைமு ஆகியோர் சி சத்யாவின் இசையமைப்பில் சர்வதேச மகளிர் தினத்திற்காக ‘பெண்ணே பெண்ணே’ என்ற ஒரு அழகான சுயாதீனப் பாடலை பாடியுள்ளனர்

இது குறித்து இசையமைப்பாளர் சி சத்யா கூறும்போது, “இது மகளிர் தினத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல். பொதுவாக, பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை போற்றுவது பற்றி இந்த சமூகம் அடிக்கடி பேசுகிறது. ஆனால், அனைத்தும் வாய்மொழியாக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

உண்மையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் கூட துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒத்துக்கொள்ளதான் வேண்டும். எனவே, பாடல் வரிகள் இது குறித்து வலியுறுத்தும் சாயல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த பாடலை உருவாக்கினோம் என்று கூறியுள்ளார். பாடலாசிரியர் தோழன் எழுதியுள்ள இந்த பாடலை பிரபாகர் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார்